கோலாலம்பூர், டிச 12: BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் 300 லிட்டர் ஒதுக்கீடு தீர்ந்தப் பிறகு ரோன்95 பெட்ரோலின் விலையை RM2.10 அல்லது RM2.30ஆக கட்டம் கட்டமாக நிர்ணயிப்பது ஆக்கப்பூர்வமற்ற உதவித்தொகை அமலாக்க முறையாகும் என்று அரசாங்கம் கருதுகிறது.
இந்த நடவடிக்கை கசிவு அபாயத்தை அதிகரிப்பதோடு அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்த பங்களிக்காது என நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
"இது சம்பந்தமாக, அரசாங்கம் பயன்பாட்டு முறைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, அவ்வப்போது வரம்புகளை மறு மதிப்பீடு செய்யும்,`` என்றார் அவர்.
"மக்களுக்கு நன்மையளிக்கவும், நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கும் இலக்கிடப்பட்ட ரோன்95 உதவித்தொகை திட்டம் தொடர்ந்து ஆராய்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் இந்த நடவடிக்கை உதவும்," என்று மேலவையில் நடந்த வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது அமீர் ஹம்சா கூறினார்.
RM2.10 அல்லது RM2.30 போன்ற கட்டம் கட்டமாக விலையை நிர்ணயிப்பதைக் காட்டிலும் முதல் 300 லிட்டருக்கு RM1.99 அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு RM2.60 என அமல்படுத்துவதற்கான அவசியம் குறித்து செனட்டர் டத்தோ அப்துல் ஹலீம் சுலைமான் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
தரவுகளின் அடிப்படையில், தனியார் பயன்பாட்டிற்கான BUDI95 பெறுநர்கள் மாதத்திற்கு சராசரியாக 98 லிட்டர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அமீர் ஹம்சா கூறினார். இது நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர தகுதி வரம்பில் 33 சதவீதம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


