புக்கிட் மெர்தாஜாம், டிச 12: இங்குள்ள செபராங் ஜெயாவில் நான்கு நாட்களுக்கு முன்பு தனது மனைவியைக் கொன்றதாக நபர் ஒருவர் நேற்று காவல்துறையில் சரணடைந்தார்.
அந்நபர் விசாரணைக்கு உதவுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார். தற்போது காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன," என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
ஜாலான் துனாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்று விட்டு, 4 நாட்களாக உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாக 28 வயதுடைய அந்நபர் கூறியுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய ஆய்வில், வீட்டில் உள்ள ஓர் அறையில் 44 வயதுடைய ஒரு பெண்ணின் சடலம் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கிடந்தது. உடலை மீட்டக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
5 பிள்ளைகளுக்குத் தாயான அம்மாது, முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொலையாளியை மறுமணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.


