கோலாலம்பூர், டிச 10 -2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய அணி தனது முதல் பதக்கத்தை வென்றது. தேசிய டேக்வாண்டோ வீரர் சின் கென் ஹாவ்வுக்கு, அவரது தாயின் வருகை பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. இதனால் அவர் நாட்டிற்காக முதல் பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.
சின் கென் ஹாவ், ஆண்களுக்கான தனிநபர் பூம்சே ஃப்ரீஸ்டைல் பிரிவில் 7.740 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தங்கப் பதக்கம் பிலிப்பைன்ஸ் வீரர் ஜஸ்டின் கோப் மக்காரியோவுக்குச் சொந்தமானது, அவர் 8.200 புள்ளிகளைப் பெற்றார். போட்டியை நடத்தும் தாய்லாந்தின் அச்சரியா கோட்காவ் 8.100 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
கென் ஹாவ் எட்டு வயதில் டேக்வாண்டோ விளையாட்டில் ஈடுபட்டதிலிருந்து அவரது தாயார் அவருக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார்.
தாயின் இன்றைய வருகை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் அவரது மன உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
“மலேசியாவிற்கு முதல் பதக்கத்தை வெல்ல எனது தாயின் ஆதரவு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சிறுவயதிலிருந்தே இன்றுவரை, என் தாயார் எப்போதும் எனக்குப் பின்னால் இருந்து வருகிறார்.
“என் தாயார் எப்போதும் எனக்கு ஊக்கமளித்து, நான் பயிற்சிக்குச் செல்வதையும், போட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வைத்திருப்பதையும் உறுதி செய்கிறார்,” என்று கென் ஹாவ் கூறினார்.
2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டி டிசம்பர் 9 முதல் 20 வரை பாங்கொக் மற்றும் சோன்புரியில் நடைபெறுகிறது.


