ஷா ஆலம், டிச 10 — BUDI Madani RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் பெட்ரோல் மானியத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டால், தனிநபர்கள் அல்லது எண்ணெய் நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
மானியக் கசிவுகளைத் தடுக்கவும் அதன் அமைப்பைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திடம் தெளிவான அமலாக்க வழிமுறைகள் உள்ளன என நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“எந்தவொரு தரப்பினரும் மானியத்தை துஷ்பிரயோகம் செய்தால், அரசாங்கம் தனிநபரின் தகுதியை ரத்து செய்வது அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கு மானியம் செலுத்துவதை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.
“எரிபொருள் அளவு அல்லது தரத்தில் முரண்பாடுகள் அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகள் இதில் அடங்கும்,” என்று அவர் நேற்று எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் கூறினார்.
BUDI95 திட்டத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கான தண்டனைகள் மற்றும் மானியம் பெறுவதில் அவர்களின் உரிமைகளை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என செனட்டர் டத்தோ ரோஸ்னி சோஹரின் கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
தவறான பயன்பாடு பொறுத்துக்கொள்ளப்படாது என்று அன்வார் வலியுறுத்தினார்.
பதிவுசெய்யப்பட்ட விற்பனையில் நெட்வொர்க் இடையூறுகள் போன்ற முன்னர் பதிவான பல சிக்கல்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“அமுலாக்க முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும், குறிப்பாக நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் ஆகும். இதற்கு காரணம் அங்கு தவறான பயன்பாடு மற்றும் எல்லை தாண்டிய கசிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.” என்றார்.


