சிபிரோக், 9 டிசம்பர்: இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியாவை பயங்கர நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் தாக்குவதற்கு முன்பு, 39 வயதான அம்ரான் சியாஜியன், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு மலையில் தபனுலி ஒராங்ஊத்தான்களை அடிக்கடி சந்தித்தார்.
ஒராங்ஊத்தான் தகவல் மையத்தில் (OIC) அழிந்து வரும் இந்த விலங்கைப் பாதுகாக்கும் ரேஞ்சராக குறைந்தது ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சியாஜியன், ஒராங்ஊத்தான்கள் அந்தப் பகுதியில் உள்ள பண்ணைகளிலிருந்து டுரியான் மற்றும் பிற பழங்களை எப்படி விரும்பி சாப்பிட்டன என்பதை நினைவு கூர்ந்தார்.
ஆனால் சிபிரோக்கை நிலச்சரிவு தாக்கிய பிறகு,ஒராங்ஊத்தான்கள் எங்கும் காணப்படவில்லை. சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் தொடர்பான காடழிப்பு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் தாக்கத்தை அதிகப்படுத்தியதாக உள்ளூர் தலைவர்களும் பசுமைக் குழுக்களும் தெரிவித்தன. பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு தபனுலி பகுதியில் உள்ள சிபிரோக் என்ற கிராமத்தில், பெரிய மரங்கள் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு நிறுவனம் குறைந்தது ஒரு வருடமாக அந்தப் பகுதியில் மரம் வெட்டி வருவதாக சியாஜியன் கூறினார்.
வெள்ளத்திற்கு முன்பே காடழிப்பு ஒராங்ஊத்தான்களைப் பாதித்துள்ளது என்று அவர் கூறினார். “ஒராங்ஊத்தான்கள் வன விதானங்களுக்கு இடையில், கிளையிலிருந்து கிளைக்கு நகர்ந்து வாழ்கின்றன. காடு குறைவாக இருந்தால், அது அவர்களுக்கு கடினமாக இருக்கும்,” என்று சியாஜியன் கூறினார். தபனுலியில் சுமார் 760ஒராங்ஊத்தான்கள் வாழ்வதாக OIC நிறுவனர் பனுத் ஹடிசிஸ்வோயோ கூறினார்.
தோட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில் காரணமாக காடுகள் இழப்பு முக்கிய அச்சுறுத்தலாகும் என்று அவர் கூறினார்.
உலக வனவிலங்கு நிதியத்தின்படி, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் மொத்தமாக சுமார் 119,000 ஒராங்ஊத்தான்கள் வாழ்கின்றன. அரசாங்க உதவி இல்லையென்றால்,ஒராங்ஊத்தான் இங்கே அழிந்து போகக்கூடும். குறிப்பாக இந்த காடழிப்புடன்,” என்று சியாஜியன் கூறினார்.


