கோல திரங்கானு, டிச 9: உணவகப் பணியாளர் ஒருவர் இணைய மோசடியால் RM77,889 இழந்தார்.
இச்சம்பத்தால் பாதிக்கப்பட்ட முகமட் நோர் (34) என்ற நபர் காவல்துறையில் புகார் அளித்தார் என கோல திரங்கானு மாவட்ட காவல் தலைவர், உதவி ஆணையாளர் அஸ்லி தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்தப்படி இலாபத்தை பெறவில்லை என்பதை உணர்ந்த பிறகு பாதிக்கப்பட்டவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
அக்டோபர் 4 அன்று, இண்ஸ்டாகிராம் வழியாகப் பெண்கள் உடைகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை செய்யும் துணை தொழில் பங்காளராக சேர வாய்ப்பு வழங்கப்பட்டது. இலாபம் 10 சதவீதம் கிடைக்கும் என கூறப்பட்டது.
“சந்தேக நபர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து பாதிக்கப்பட்டவரை விற்பனையாளராக செயல்படுமாறு கேட்டார். பின்னர், வாடிக்கையாளர் ஆர்டர்கள் வரும் போது வணிக பரிமாற்றத்திற்கான செயல்முறை கட்டணத்தை செலுத்துமாறு கூறப்பட்டது.
இந்த வாய்ப்பை நம்பிய பாதிக்கப்பட்டவர், அக்டோபர் 16 முதல் நவம்பர் 26 வரை ஆறு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு RM77,889 செலுத்தினார். இதற்காக தமது சொந்தச் சேமிப்பும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கடனும் பெற்றார்.
எல்லா பணமும் செலுத்தப்பட்ட பிறகும், வாக்குறுதி அளித்த இலாபத்தை அவர் பெற முடியவில்லை.
மோசடி குற்றத்திற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டிய இணைய வேலை வாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அஸ்லி அறிவுறுத்தினார்.


