ரவாங், டிச 9: எதிர்வரும் டிசம்பர் 20 அன்று நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் (OKU) தினக் கொண்டாட்டக் கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சிலாங்கூர் யாயாசான் இன்சான் இஸ்திமேவா (YANIS) அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாயாங் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) மருத்துவ புலத்தில் நடைபெறும் என்று சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூதாயத்தின் பங்களிப்பை கொண்டாடவும் அங்கீகரிக்கவும், மேலும் அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை உயர்த்துவதையும் இந்த கார்னிவல் நோக்கமாக கொண்டது.
“இந்நிகழ்வு அரசு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் இருக்கும்.
“பொதுமக்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் கொண்ட பெற்றோர்கள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்,” என்று அன்ஃபால் மீடியா சிலாங்கூரைச் சந்தித்தபோது கூறினார்.
இந்நிகழ்வில் 3 கிலோமீட்டர் தூரம் நடை, பெற்றோர்களுக்கான கருத்தரங்கு மற்றும் அனிஸ் சிறப்பு உதவி வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.
மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிப்பாடல் போட்டி, சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்டத்தை தலைப்பாகக் கொண்ட 3D அட்டை தயாரித்தல் போட்டி, அதோடு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கண்காட்சிகளும் நடைபெறும்.


