ஷா ஆலாம், டிசம்பர் 8 —சிலாங்கூர் மாநில அரசு நடத்திய “இந்திய சமூகத் தலைவர்களுக்கு ஜாசா பக்தி அங்கீகார விழா 2024 – 2025” நிகழ்வில் பங்கேற்று அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்தனர்.
இந்த அங்கீகாரம் தங்களுக்குக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியுடன் பேசினார் தெரத்தாய் இந்திய சமூகத் தலைவர் கே. சரஸ்வதி. “இந்த விருதை பெறுவது எங்களுக்கு பெரும் பெருமை. இது எங்கள் சமூக சேவையை தொடர்ந்து செய்யும் உற்சாகத்தையும் உறுதியையும் அதிகரித்துள்ளது.

நானும் என் குழுவினரும் உண்மையான மக்கள் சேவையை முன்னிலைப்படுத்தி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ‘Sejati Madani’ முயற்சியின் கீழ் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து சொந்த பொருட்களை உருவாக்கியுள்ளோம்.. வாசனை செராய் செடியை பயன்படுத்தி நறுமண எண்ணெய், குளியல் திரவம், உடம்பு பிடி எண்ணெய் போன்ற பல பயனுள்ள தயாரிப்புகளை செய்துள்ளோம். தற்போது எங்கள் தயாரிப்புகள் சமூகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டு பெண்களுக்கு பல பயிற்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். மேலும் இன்று இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் மிகுந்த பெருமையையும் திருப்தியையும் உணர்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குப் பெற்ற செமினி தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் திரு. நடேசன் அவர்கள் தமது நீண்ட சேவைப் பயணத்தைப் பகிர்ந்தார். “நான் இந்த பொறுப்பை மூன்று தவனையாக வகித்துள்ளேன். செமினி பகுதியில் இன்று பதின்மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் பலர் b-40 மற்றும் m-40 நிலை வருமானக் குழுவைச் சேர்ந்தவர்கள், பலர் மருத்துவ உதவி தேவைப் படுகிறவர்களும் உள்ளனர்.

எனது கடமையாக சிலாங்கூர் மாநில அரசின் உதவித் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே. மாநில அரசு வழங்கும் பல திட்டங்கள் மற்றும் உதவிகளைப் பற்றி மக்களுக்கு விளக்கி, தேவையான இடங்களில் விண்ணப்பிக்க உதவி செய்து வருகிறோம். எங்கள் குழுவினருடன் இணைந்து கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேக்கா’ திட்டத்தின் மூலம் உதவி செய்து வருகிறோம்.
மக்கள் நலனுக்காக பெரும் பணிகளை செய்து வரும் சிலாங்கூர் மாநில மந்திரி புசாருக்கும் சிலாங்கூர் மாநில மனித வளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
குறிப்பாக 2026 பட்ஜெட்டில் மாணவர்களுக்கான பள்ளி பேருந்து பயண உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் செமினி பகுதியில் தற்போது வெள்ள பிரச்சனையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். முன்பு வெள்ளத்தில் பாதிக்கப் படும் குடும்பத்துக்கு பொருட்கள் மற்றும் வீடுகளை பழுது பார்க்கும் பணிகளுக்கு உதவியுள்ளதாக் அவர் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்தைப் பெறுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. மாநில முதல்வருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அவர்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த 62 தலைவர்கள் தங்கள் பகுதிகளில் இந்திய சமூகத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக இருந்து, மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைப்பதில் இருந்து தீர்வுகளைப் பெற்றுத் தருவது வரை பல்வேறு பொறுப்புகளை மனம் திறந்து மேற்கொண்டதாக” ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வலியுறுத்தினார்.
அவர்கள் “சமூகத் தலைவர்” என்ற பெயருக்குப் புறம்பாக, மக்கள் நலனுக்காக போராடுபவர்கள், நம்பிக்கையை மீட்டெடுப்பவர்கள், சமூக குரலை உயர்த்துபவர்கள், மேலும் எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார ஒளி வழங்குபவர்கள் என அவர் பாராட்டினார். இரண்டு ஆண்டுகள் தங்களது நேரம், ஆற்றல் மற்றும் அன்பை சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த இவர்களின் சேவை மிக உயர்ந்த மரியாதைக்கும் உரியது என்று அவர் தெரிவித்தார்.
மோரிப் தொகுதியைச் சேர்ந்த எலிசா சாம்சன் அவர்கள் தனது பகுதி சந்திக்கும் சவால்களை விளக்கினார். “எங்கள் மோரிப் பகுதியில் சுமார் ஏழாயிரம் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். சாலைகள் சேதம், நீர் நிற்கும் வடிகால்கள், தெரு விளக்குப் பிரச்சனைகள் போன்றவை அவரது பகுதியில் இருந்ததாக அவர் தெரிவித்தார் . இந்த பொறுப்பை வகித்த காலத்தில், மாவட்ட அலுவலகத்துடன் நெருக்கமாக இணைந்து பல பழுதுபார்ப்பு பணிகளை செய்து முடித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் ஒரு சமூகத் தலைவராக மாதம் கிடைக்கும் ஊக்கத்தொகை போதவில்லை என்ற கருத்தை முன் வைத்தார். ஏனெனில் சில நேரங்களில் நாங்களே எங்கள் பணத்தை கொண்டு சமூக நலனுக்காக செலவழிக்க வேண்டி இருக்கும் நிலையில் அவர் பற்றாகுறையாக உள்ளதாக அவர் கூறினார். இந்திய சமூகத்துக்காக பல திட்டங்களையும் செயல்பாடுகளையும் நடத்தி வருகிறோம். தற்போது கிடைக்கும் ஊக்கத்தொகை மற்றும் எங்களுக்கு ஒதுக்கி உள்ள நிதி உதவி பத்தாயிரம் எங்கள் பணிகளுக்கு போதவில்லை என்றும் அவர் கூறினார். எனவே, இந்த இரண்டு தொகைகளையும் உயர்த்தினால் சமூக சேவை மேலும் சிறப்பாக நடக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். மேலும் இன்று இந்த சான்றிதழை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் தன் உணர்ச்சியை பகிர்ந்தார்.
சமூக முன்னேற்றத்தில் அர்ப்பணிப்புடன் செயல் பட்ட 62 இந்திய அடித்தளத் தலைவர் களுக்கு “ஜாசா பக்தி அங்கீகாரம்” வழங்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவை பெருமையுடன் நினைவுகூரப்பட்டது. மேலும் இந்தியக் குழுத் தலைவர்கள் சமூகத்திற்காக மேற்கொள்ளும் பணிகள் எவ்வளவு முக்கியமானது என்பதை உறுதியாகக் காட்டுகின்றன. இவர்களின் அர்ப்பணிப்பை, தன்னிலை மறுப்பு மற்றும் சமூக நலனுக்கான உண்மையான சேவை, சிலாங்கூர் மாநில இந்தியக் சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றன என்றர் அவர்.


