கோலாலம்பூர், டிச 8 - வருடாந்திர வருமானம் RM 1 மில்லியனுக்கு குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு e-invoicing நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சிறிய வணிகர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் சொன்னார். இதற்கு முன், இந்த விலக்கு RM500,000 க்கும் கீழ் வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், சிறு நிறுவனங்களுக்கு இது சுமையாக இருக்கின்றது என்பதால் இந்த விலக்கு வழங்கப்படுவதாக அன்வார் விளக்கினார்.
மேலும், RM1 மில்லியனுக்கு மேல் வருமானம் பெறும் நிறுவனங்களுக்கு இந்த e-invoicing முறை ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கம் நிச்சயம் ஆய்வு செய்யும் என்றார் அவர்.
கூடுதலாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறும் நடைமுறையில் சுணக்கம் நிலவுவதாக சீன வணிக சமூகத்தினர் பரவலாக புகார் செய்திருப்பது குறித்தும் பிரதமர் கருத்துரைத்தார்.
நிலுவையில் உள்ள வரிப் பணத்தை வணிகர்களுக்கு திருப்பிச் செலுத்துவதை விரைவு படுத்தும் நோக்கில் அரசாங்கம் RM2 பில்லியனிலிருந்து RM4 பில்லியனாக ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என அவர் உறுதியளித்தார்.
கோத்தா கினாபாலுவில் உள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற `Madani Sentuhan Rakyat` நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு கூறினார்.


