கோலாலம்பூர், டிச 8- தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக மலேசிய சீனர் சங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறினார்.
அடுத்த பொதுத்தேர்தலில் மசீச ஜசெக கட்சியுடன் அரசியல் கூட்டணி கொள்ளாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது மசீச தொடர்ந்து தேசிய முன்னணியில் இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இதுவரை ம.சீ.ச தேசிய முன்னணியுடன் தான் பயணிப்பதாக அம்னோ உதவி தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, தேசிய முன்னணியில் மசீசவின் நிலை குறித்து அக்கட்சி பரீசிலித்து வருவதாக ம.சீ.ச கட்சியின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1973ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணியில் அம்னோ, மசீச, மற்றும் ம.இ.கா ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன.


