பெட்டாலிங் ஜெயா, டிச 8- கடந்த மாதம் பள்ளியில் தன் சக மாணவனுக்குக் காயம் விளைவித்ததாக இரு நண்பர்கள் மீது இங்குள்ள சுங்கை பட்டாணி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இரு இளைஞர்கள் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
17 வயதுடைய பாதிக்கப்பட்ட நபரை 24ஆம் தேதி நவம்பர் மாதம் நள்ளிரவு 12.04 மணிக்கு அவர்கள் இருவரும் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 323இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்
இருவருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட் பிணைத்தொகையுடன் ஒருவர் உத்தரவாதத்தின் பேரில் நீதிமன்றம் அவர்களை ஜாமினில் விடுவித்தது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
முன்னதாக, ஓர் இளைஞரை பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் பாதிக்கபட்ட இளைஞர் பள்ளி உறைவிட கழிவறையில் மயங்கி கிடந்தார் என்று ஊடகங்கள் இதற்கு முன் செய்திகளை வெளியிட்டிருந்தது.


