பொது போக்குவரத்து நிலையங்கள் அருகில் உருவாக்கப்படும் புதிய வீட்டு திட்டங்களில் கார் நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்மொழிவு

8 டிசம்பர் 2025, 3:12 AM
பொது போக்குவரத்து நிலையங்கள் அருகில் உருவாக்கப்படும் புதிய வீட்டு திட்டங்களில் கார் நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்மொழிவு

செர்டாங், டிச 8 — பொது போக்குவரத்து நிலையங்கள் அருகில் உருவாக்கப்படும் புதிய வீட்டு திட்டங்களில் கார் நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ஹௌசிங் டெவலப்பர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்று அல்லது இரண்டு பார்க்கிங் இடங்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை, சொத்து விலைகள் உயர்வதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதால், இந்த முன்மொழிவை வீட்டு மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு (KPKT) சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

“எல்.ஆர்.டி அல்லது எம்.ஆர்.டி போன்ற பொது போக்குவரத்து நிலையங்களுக்கு அருகிலுள்ள திட்டங்களுக்கு, குடியிருப்பவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் பார்க்கிங் தேவைகளை குறைக்கலாம்,” என்று அவர் Multiplex Land Sdn Bhd நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா மற்றும் அலமெண்டா ஹைட்ஸ் திட்டத்தின் முன்தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார.

கோலாலம்பூர் நகரில் உள்ள பல போக்குவரத்து-மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி (TOD) திட்டங்களுக்கு, பார்க்கிங் தேவைகளை தளர்த்துவதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி மன்றங்களிடம் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லோக் தெரிவித்தார்.

இன்றைய குடும்பங்களில் பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த லோக், இந்த முன்மொழிவு புதிய திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும், நகர ரெயில் வலையமைப்புகளின் அருகில் வசிக்கும் இளைஞர்களை முதன்மையாக குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“அவர்கள் பொது போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் வசித்து வந்தால், கார் வைத்திருக்கும் அவசியம் குறையக்கூடும். இது அவர்களின் வாழ்க்கைச் செலவையும் குறைக்க உதவும்,” என்று லோக் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தை அதிகம் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறையை நோக்கிய நீண்டகால மாற்றத்தை ஆதரிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.