ஷா ஆலாம், டிசம்பர் 8: நேற்று மாலை பந்திங், சுங்கை சீடு வில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வண்ணப்பூச்சு பட்டறை மற்றும் எட்டு வாகனங்கள் எரிந்து நாசமாகின. மின்னல் தாக்கியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தால் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டையும் சேதப்படுத்தியது என்று கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி கூறினார். இச்சம்பவம் மாலை 5 மணியளவில் ஏற்பட்டதாகவும், முதலில் தீ பிடிக்க தொடங்கிய பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
“சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) ஆரம்ப தகவலின்படி, தீ விபத்துக்கான காரணம் மின்னல் தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தீ விபத்தில் வாகன பட்டறையில் இருந்த எட்டு வாகனங்களும், வண்ணப்பூச்சு பொருட்கள், கருவிகள் மற்றும் அருகிலிருந்த ஒரு வீடும் சேதமடைந்ததாக கூறப்பட்டது.
எந்தவித உயிர் சேதமும் இல்லாமல் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், நடவடிக்கை மாலை 7.20 மணிக்கு நிறைவுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.


