‘வறுமை ஒழிப்பில் மலேசியா கணிசமான முன்னேற்றம் காட்டுகிறது: உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்’

7 டிசம்பர் 2025, 5:39 AM
‘வறுமை ஒழிப்பில் மலேசியா கணிசமான முன்னேற்றம் காட்டுகிறது: உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்’

புத்ராஜெயா, டிசம்பர் 6 — உலக வங்கி, குறிப்பாக  கடுமையான வறுமையை ஒழிப்பதில் மலேசியா காட்டிய வலுவான முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ளது.

அதேநேரம், உள்ளடக்கிய மற்றும் சமநீதியான வளர்ச்சியை ஆதரிக்க கல்வி மற்றும் சுகாதார முடிவுகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவத்துக்கான மூத்த பொருளாதார நிபுணர் ரிரின் சல்வா பூர்ணமசாரி கூறுகையில், கடந்த தலைமுறையில் மலேசியா அடைந்த சாதனைகள் “மறுக்க முடியாதவை” என்றும், இப்போது  கடுமையான வறுமை ஏறக்குறைய முற்றிலும் ஒழிக்கப் பட்டுவிட்டது என்றும் கூறினார்.

“வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வை குறைப்பதில் மலேசியாவின் முயற்சிகள் ஈர்க்க கூடியவை. கடுமையான வறுமை இப்போது ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது. கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் இலக்கு அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு விட்டது,” என்று இன்று இங்கு நடைபெற்ற தேசிய பொது சேவை சீர்திருத்த மாநாடுடன் இணைந்து நடைபெற்ற “ரஞ்சாக்கான் மடாணி” நிகழ்வின் குழு விவாத அமர்வில் அவர் தெரிவித்தார்.

கடுமையான வறுமையை ஒழிப்பதோடு நின்றுவிடாமல், மிகவும் பரந்த மற்றும் சமநீதியான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று ரிரின் வலியுறுத்தினார்.

“மலேசியாவின் வெற்றி என்பது கடுமையான வறுமையில் இருந்து மக்களை மீட்பது மட்டுமல்ல. நாடு இன்னும் பெரிய லட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம், விரிவான சுகாதாரப் பாதுகாப்பு, 13-வது மலேசியத் திட்டத்தின் (13MP) கட்டமைப்பு உள்ளிட்ட வலுவான அடித்தளங்கள் ஏற்கனவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“மலேசியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அதிகமாகச் செய்வது அல்ல; ஏற்கனவே உள்ளவற்றை மிகச் சிறப்பாக இணைப்பதாகும்,” என்று ரிரின் கூறினார்.

உள்ளடக்கிய உயர் வருவாய் எதிர்காலத்தை அடைவதற்கு மலேசியா நல்ல நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“மலேசியா உயர் வருவாய் நாடு என்ற நிலையை அடையும் பாதையில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இன்ஷா அல்லாஹ், மலேசியா உயர் வருவாய் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும்,” என்றார். 30 நிமிட குழு விவாதத்தில் கல்வி அமைச்சின் பொது இயக்குநர் மொஹ்ட் அசாம் அஹ்மட் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர் டாக்டர் ஷாஸ்ரில் ஷஹாருடின் ஆகியோரும் பங்கேற்றனர்.

நேற்று தொடங்கிய மூன்று நாள் ரஞ்சாக்கான் மடாணி  நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பொது சேவை தொடுகை புள்ளிகள், தொழில் கண்காட்சி, ஊடாடும் காட்சிப் படுத்தல்கள், குடும்ப பொழுது போக்கு மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ளன. பிரதமர் அலுவலகத்தின் செயல்திறன் முடக்க அலுவல் பிரிவு (PACU) ஏற்பாடு செய்த இந்நிகழ்வு 300,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை காலை 11 மணிக்கு நிறைவு விழாவை தொடங்கி வைப்பார். “மடாணி அரசுடன் ஒரு ஆண்டு”, “மடாணிஅரசுடன் இரண்டு ஆண்டு” நிகழ்வுகளின் தாக்கத்தைத் தொடர்ந்து, அரசின் சாதனைகளை நேரடியாக மக்களிடம் தெரிவிக்கும் வருடாந்திர மரபை ரஞ்சாக்கான் மடாணி தொடர்கிறது.

அதே நேரத்தில் நடைபெறும் தேசிய பொது சேவை சீர்திருத்த மாநாடு, பொதுத்துறை மற்றும் தொழில் வல்லுநர்களின் கொள்கை நிபுணர்களை ஒருங்கிணைக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.