கிள்ளான், டிசம்பர் 6 — “Wake Up and Make Up Klang” பிரச்சாரம் தொடர்ந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று கோல கிள்ளான் நகரில் நடைபெற்ற சமூக சுத்தம் மற்றும் சுவர் ஓவியம் வரைதல் நிகழ்ச்சியில் அரசு ஏஜென்சிகள், தொழில் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிள்ளான் அரச நகர மன்றம் (MBDK) மற்றும் கோல கிள்ளான் ஆணையத்துடன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை கிள்ளான் மேயர் டத்தோ அப்துல் ஹமீது உசேன் தொடக்கி வைத்தார்.
நகர மையத்தை அழகுபடுத்தவும் புத்துயிர் அளிக்கவும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்தது. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் ஆதரவால் இந்தப் பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளதாக மேயர் அப்துல் ஹமீது உசேன் தெரிவித்தார்.
“கோலக் கிள்ளான் நகரின் சுத்தம், நிலைத்தன்மை மற்றும் அடையாளம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அழகுபடுத்துதல் மற்றும் ஓவியம் வரைதல் நடவடிக்கையில் அவர்கள் பங்கேற்றனர்.புதிய சுவர் ஓவியம் கிள்ளானின் கடல்சார் அடையாளத்தை வெளிப்படுத்தும் புதிய காட்சி ஈர்ப்பாக அமையும் என்றும், இது பசுமை துறைமுகம் என்ற இலக்கிற்கு ஏற்ப உள்ளது என்றும் ஹமிட் கூறினார்.
நகரின் சுத்தம் மற்றும் தோற்றத்திற்கு பகிரப்பட்டு பொறுப்புணர்வை வளர்ப்பதில் இந்தப் பிரச்சாரத்தின் செயல்திறனை இது நிரூபிப்பதாக வும் அவர் சுட்டிக் காட்டினார். “இந்த முயற்சி, கிள்ளானை மிகவும் சுத்தமான, பிரகாசமான மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த நகரமாக உயர்த்த எம்.பி.டி.கே-யின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது,” என்று ஹமிட் கூறினார்.


