கோலக்கிள்ளான் டிச 5; கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இனத்திற்கும் மொழிக்கும் சமயத்திற்கும் நிறைவாக வினையாற்றி பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த தோழர்கள் சின்னதம்பி கதிர்வேலு, தியாகச் செம்மல் தங்கராஜ் சங்கமரெட்டி, சின்னதம்பி ஆறுமுகம் ஆகியோரின் நினைவேந்தல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்றது. அப்பெருமகனார்களின் குடும்ப உறவுகள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமுதாய பற்றாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து; திருக்குறள் ஓதுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சி திருமுறை ஓதுதலுடன் இறையருளைப் பெற்றது. பின் தமிழ்வாழ்த்து பாடப்பெற்ற வேளையில்; மறைந்த பெருமகனார்களின் இணையர்கள் தங்கள் கணவரின் உருவப் படங்களுக்குத் தீபம் ஏற்றி வணங்கினர்.
வரவேற்புரையாற்றிய கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் பூவராசன் சிதம்பரநாதன்; தம் தந்தைக்கு உற்ற தோழமையாக விளங்கிய பெருமகனார் மூவரும் தம் வாழ்க்கை பயணத்தில் ஏற்படுத்திய நெகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பெருமகனார் மூவரும் அளித்துச் சென்ற நீங்கா நினைவுகளின் பதிவுகள் காணொலி வடிவில் இடம்பெற்றது.
சிறப்புரை வழங்கிய கேசி ஃபோர்வடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இராமசந்திரன் அப்பண்ணன்; தன் நீண்டநாள் தோழர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் முத்துகளாய் மூவர் என்ற தலைப்பிலான நினைவுமலரும் வெளியீடு கண்டது. நினைவுமலரினை இராமசந்திரன் அப்பண்ணன் மனித உரிமைக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பிணர்களின் இணைத்தலைவர், தோழர் சார்லஸ் சந்தியாகோ சார்காக வெளியீடு செய்த நிலையில்; முதல் நூலினை மறைந்த பெருமகனார்களின் இணையர்கள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்த அன்பர்கள் சிலர்; பெருமகனார் மூவர் குறித்த தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தோழர் சின்னதம்பி ஆறுமுகத்தின் புதல்வன், திரு. பிரேம்குமரன் சின்னத்தம்பி மறைந்த பெருமகனார்களில் குடும்பங்களை நிகர்த்து நன்றியுரையாற்றிய வேளையில், மலர்வணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிறைவினைக் கண்டது.


