பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 5: நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகள் வழியாக கொண்டு வரப்பட்ட மெத்தாம் பெட்டமைன் மற்றும் கேட்டமைன் வகை போதைப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்தை போலீசார் முற்றிலும் முறியடித்துள்ளனர். டிசம்பர் 1ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பேராக் பகுதிகளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி திடீர் சோதனைகளில், மொத்தம் RM 13.8 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையில் 26 முதல் 46 வயதில் உள்ள ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக நாட்டின் போதைப் பொருள் குற்றப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் முன்னாள் போலீஸ் உறுப்பினராக இருந்தவர் என்றும் கூறினார்.
முதல் கட்ட சோதனை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்றது. அங்கு மொத்தம் 263 பொட்டலங்களில் 273 கிலோ எடையிலான மெத்தாம்பெட்டமைன்னும், 98 பொட்டலங்களில் 101 கிலோ கேட்டமைனும் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது சோதனை பேராக் மாநிலம் சிம்பாங் பூலாய் பகுதியில் உள்ள ஓய்விடத்தின் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு மையத்தின் வெளிப்புறத்தில் நடைபெற்றது. அங்கு கண்காணிப்புப் பொறுப்பை ஏற்று இருந்த ஆறாவது நபர் கைது செய்யப்பட்டார். எனினும் அவரின் வாகனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை.
கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் அண்டை நாட்டிலிருந்து காட்டு வழிகள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதன் பிறகு கிள்ளான் பள்ளத்தாக்குக்குள் கொண்டு வந்து விற்பனைக்கு தயாராக்கப்பட்டதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்தப் பொருட்கள் 1.7 மில்லியன் பயனாளர்களுக்கு வழங்கக்கூடிய அளவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சந்தேக நபர்களும் டிசம்பர் 2 முதல் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை 1952ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் நடைபெறுகிறது


