ஷா ஆலம், டிச 5 - கடந்த ஐந்து வருடங்களாக சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா மூலம் ஐ-சிட் எனும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பிரத்தியேகமாக இந்திய தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் வியாபாரத் துறையில் ஈடுபடும் இந்தியத் தொழில்முனைவோருக்கு வணிகத்திற்க்கு தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்.
இத்திட்டம் இந்தியர்களை வியாபாரத் துறையில் ஈடுபட ஊக்குவிப்பதோடு தொழில்முனைவோரின் வருமானத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஐ-சிட் ஒருக்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில தகுதிகளை தொழில் முனைவோர் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.அவை,
1)குடும்ப வருமானம் RM3,000 க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்
2) சிலாங்கூர் வாக்காளராக இருக்க வேண்டும்
3) முழுநேர வணிகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்; பருவ கால வணிகம் அங்கீகரிக்கப்படாது
4)பிற அரசாங்க உதவிகளைப் பெற்றிருக்கக் கூடாது
5)வணிக வளாகம் / தளம் ஊராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்
இந்த தகுதிகளைக் கொண்டிந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என அறிவுறுத்தினார் மாதவன். சிலாங்கூர் அரசு இந்தியர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை இது போன்ற திட்டங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன என்பதில் ஐயமில்லை.
ஐ-சிட் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தாங்கள் பல சமூக தளங்களை, அதாவது முகநூல், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இவற்றில் ஐ-சிட் குறித்த தகவல்கள் அவ்வவ்போது பகிரப்படும் என்றார்.
ஆண்டு தொடக்கத்தில் இந்தியக் கிராமத் தலைவர்களுக்கு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர்களுக்கு இத்திட்டத்திற்கான விண்ணப்ப பாரங்கள் வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் கிராமத் தலைவர்களை அணுகி இந்த விண்ணப்பப் பாரங்களைப் பெற்று கொள்ளலாம்.
மேலும், இந்த திட்டத்தில் பங்கு பெற தன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது சிலாங்கூர் மாநில செயலாளர் அலுவலகத்தில் உள்ள மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலத்தை நாடவும் அவர் கேட்டுக் கொண்டார்.


