கோத்தா கினாபாலு, டிச 5- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இன்று அதிகாலை காலமான கினபாத்தங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
லாமாக் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த புங் மொக்தார் அவர்களை, அன்வார் தனது பழைய நண்பர் என்று வர்ணித்ததுடன், மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அவரது உறுதியான நிலைப்பாடு மற்றும் துணிச்சலான குரல் என்றும் நினைவு கூர்ந்தார்.
"குறிப்பாக சபா மக்களுக்கும் நாட்டிற்கும் அரசியலில் அவர் ஆற்றிய சேவைகளும், அர்ப்பணிப்பும் எப்போதும் போற்றப்படும், நினைவில் நிலைத்திருக்கும்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்தச் சோதனையான வேளையைச் சமாளிக்க குடும்பத்திற்கு பலம் கிடைக்க தான் பிரார்த்திப்பதாகவும், மேலும் அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து, அவரைத் தன் அண்மையில் ஒரு சிறப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அன்வார் பிரார்த்தித்தார்.


