ஷா ஆலம், டிசம்பர் 5: கினபத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினின் மறைவு நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு என்று மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
புங் மொக்தார் நாட்டின் அரசியல் களத்திற்கு நிறைய பங்களித்துள்ளார் என்றும், அவரது குணமும் நடத்தையும் நிச்சயமாக அனைவரின் நினைவாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் அவரின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். இவரின் மறைவு நிச்சயமாக நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பாகும் என்று அவர் மீடியா சிலாங்கூர் உடன் பேசிய போது தெரிவித்தார்.
ஆறு முறை கினபத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அம்னோ மற்றும் பாரிசன் நேஷனலின் சபா பிரிவுகளின் தலைவராக இருந்தார். இன்று அதிகாலை 1.46 மணிக்கு புங் மொக்தார் காலமானதாக அவரது மகன் தெரிவித்தார். தனது தந்தை சபாவின் கோத்தா கினாபாலுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் முன்பு கூறியிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில், அவர் லாமாக் சட்டமன்ற தொகுதியை ஆறு வேட்பாளர்களுடனனா போட்டியில் 153 வாக்கு பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றி இருந்தார்.
1999 நவம்பர் மாதம் நடைபெற்ற 10-ஆம் பொதுத் தேர்தலில், அவர் கினபத்தாங்கன் பாராளுமன்றத் தொகுதியை வெற்றி பெற்று, அந்தப் பகுதிக்கு ஆறு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.


