கோத்தகினபாலு, டிச 5: அம்னோவின் மூத்த உறுப்பினர் புங் மொக்தார் ராடின், இரண்டாவது முறையாக லாமாக் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், தனது 66 வயதில் காலமானார்.
ஆறு முறை கினபத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அம்னோ மற்றும் பாரிசன் நேஷனலின் சபா பிரிவுகளின் தலைவராக இருந்தார். இன்று அதிகாலை 1.46 மணிக்கு புங் மொக்தார் காலமானதாக அவரது மகன் தெரிவித்தார். தனது தந்தை சபாவின் கோத்தா கினாபாலுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் முன்பு கூறியிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில், அவர் லாமாக் சட்டமன்ற தொகுதியை ஆறு வேட்பாளர்கள் மோதிய போட்டியில் 153 வாக்கு பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றி இருந்தார்.
1999 நவம்பர் மாதம் நடைபெற்ற 10-ஆம் பொதுத் தேர்தலில், அவர் கினபத்தாங்கன் பாராளுமன்றத் தொகுதியை வெற்றி பெற்று, அந்தப் பகுதிக்கு ஆறு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.


