கோலாலம்பூர், டிசம்பர் 4 — இலக்கு மானியங்களை (targeted subsidies) செயல்படுத்துவது தேசியக் கடனை அதிகரிப்பதில்லை; மாறாக, நீண்டகாலப் பொறுப்புகளைக் குறைப்பதற்கும், நிதி நிலையை உறுதிப்படுத்துவதற்கும், மலேசியாவின் பொருளாதார எதிர்காலம் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான உத்தியாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலக்கு மானியத்தால் கிடைக்கும் சேமிப்பு மக்களின் நலனை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து வசதிகள் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சு கூறியது.
RON95 பெட்ரோல் மானிய மறு ஒழுங்குமுறைப் படுத்தல் (subsidy rationalisation) என்பது மக்களின் சுமையைக் குறைப்பதற்கும், செலவினங்களின் திறனை அதிகரிப்பதற்கும், நாட்டின் நிதி வளங்களை சிறப்பாக விநியோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.
உள்நாட்டு நுகர்வுத் தரவுகளின் படியும், தற்போதைய RON95 நுகர்வில் சுமார் 20 விழுக்காடு மானியத்திற்கு தகுதியற்ற நுகர்வோர் (வெளிநாட்டவர், வணிக நுகர்வோர் போன்றோர்) எனும் கணிப்பின் அடிப்படையிலும் அரசாங்கம் ஆண்டொன்றுக்கு ரிம.2.5 பில்லியன் முதல் ரிம.4 பில்லியன் வரை சேமிப்பை எதிர்பார்க்கிறது.
“இந்தச் சேமிப்பு வரம்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு அமெரிக்க டாலர் 60 முதல் 80 வரையிலான விலை அடிப்படையில், மானியம் நீக்கப்படும் தகுதியற்ற பிரிவினரையும் கருத்தில் கொண்டே கணிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், RON95 விலையை அனைவருக்கும் சந்தை விலைக்கு உயர்த்துவதை விட இலக்கு மானிய முறை பணவீக்கத்தில் (inflation) திடீர் உயர்வைத் தவிர்க்கும் நன்மை கொண்டது என்றும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பணவீக்கம் 2 விழுக்காட்டிற்கும் கீழேயே இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் குறிப்பிட்டது.
“இது பல்வேறு தினசரி பயண தூரம் கொண்ட குடிமக்களின் RON95 பயன்பாட்டு அளவுகளுக்கு ஏற்ப இடமளிக்கவும் உதவுகிறது” என்றும் கூறியது.பொறுப்பான மற்றும் கவனமான நிதி அணுகுமுறையை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றும் என்றும், இலக்கு மானியங்கள் கடனை அதிகரிக்காமல் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும், நலன்கள் மிகவும் திறம்பட மக்களை சென்றடையும் என்றும் உறுதியளித்தது.
இது பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் ரபிசி ரம்லியின் கேள்விக்கான பதிலாகும். அவர் 2025, 2026, 2027 ஆண்டுகளுக்கான RON95 மானியத் திட்டத்தின் ஆண்டுச் சேமிப்பு, செயலாக்கச் செலவு, சேமிப்பு எவ்வாறு பயன்படுத்தப்படும், எந்த ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும், நாட்டின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு விழுக்காடு மேம்படும் என்பது குறித்து கேட்டிருந்தார்.


