ஷா ஆலம், டிச 5: லோரோங் 1/3A, தாமான் பிரிமா சௌஜானாவில் உள்ள வடிகாலில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது வெள்ளப் பெருக்கு அடித்து சென்ற 14 வயது சிறுவனைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை (SAR), நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்ட பின்னர், இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டது.
இன்று காலை 8 மணியளவில் தேடுதல் தொடங்கும் என காஜாங் மாவட்டத்தின் போலீஸ் தலைமை அதிகாரி நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார். நேற்று, ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அதே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 வயது தம்பி, சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கை மெர்பாவ், கம்புங் சுங்கை கந்தான் பகுதியில் மாலை 7.47 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால், அச்சிறுவன் உடலில் ஏற்பட்ட காயத்தால் இரவு 10 மணிக்கு காஜாங் மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவத்திற்கு முன் இரு சகோதரர்களும் தங்கள் நண்பர்களுடன் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து வடிகாலுக்கு உருண்டு சென்றதால் அதை எடுக்க முயன்றபோது இச்சம்பவம் ஏற்பட்டது.


