கிள்ளான் அரச நகர மன்றம் (MBDK) வெள்ளத் தடுப்புக்கான புதிய மூலோபாயத் திட்டம் வெளியீடு

4 டிசம்பர் 2025, 8:42 AM
கிள்ளான் அரச நகர மன்றம் (MBDK) வெள்ளத் தடுப்புக்கான புதிய மூலோபாயத் திட்டம் வெளியீடு

கிள்ளான், டிச 4- கிள்ளான் அரச நகர மன்றம் வெள்ளத் தடுப்புக்கான மூன்று முக்கிய மூலோபாயங்களை மையமாகக் கொண்ட சமீபத்திய திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கிள்ளான் மேயர், டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் பேசுகையில், இந்த அணுகுமுறையில் நீடித்த நிலையான அபிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல், ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை மற்றும் சட்ட அமலாக்க அம்சங்களை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் மூலம், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வெள்ள அபாயங்களைக் குறைக்க, நகர்ப்புற மேம்பாடு, குப்பை மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்துதல் ஆகியவை முறையாகச் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம், MBDK பகுதிகள் முழுவதும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரிவாகவும், திறம்படவும் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தில் வடிகால் அமைப்புகளைத் தரம் உயர்த்துதல், நீர் சேகரிப்புக் குளங்களை அமைத்தல், வெள்ளப் பம்புகளை நிறுவுதல் மற்றும் கிள்ளான் நதியை நேசிப்போம் திட்டம் மூலம் நதிக்கரையை சுத்தம் செய்தல் போன்ற முக்கியப் பணிகள் அடங்கும்.

இந்த முயற்சிகள் ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG 1 முதல் SDG 7 வரை), மலேசியத் திட்டம் 12, சிலாங்கூர் மாநிலக் கட்டமைப்புத் திட்டம் 2035 மற்றும் கிள்ளான் அரச நகர உள்ளூர் திட்டமிடல் 2035 உடன் ஒத்துப்போகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS), மலேசிய வானிலை ஆய்வுத் துறை (JMM) மற்றும் பொதுப் பணித் துறை (JKR) போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்ளீடுகளையும் MBDK கவனத்தில் எடுத்துள்ளதாக அப்துல் ஹமீட் ஹுசைன் தெரிவித்தார்.

உலகளாவிய வெப்பமயமாதல் சவால்களால், அதிவேக நகரமயமாக்கல், சாலைகள் மற்றும் நிலப்பரப்பு அதிகரிப்பு, அதிக மழைப்பொழிவு மற்றும் வடிகால் அமைப்பைச் சரியாகப் பராமரிக்காத காரணங்களால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.

மேரு, புக்கிட் காப்பார், பண்டார் புக்கிட் ராஜா மற்றும் பண்டார் புத்ரா போன்ற பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன, எனவே, உள்ளூர் சமூகத்தின் வசதியைப் பாதுகாக்க ஒரு ஒருங்கிணைந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் மிகவும் அவசியம்.

இந்த அமர்வு வெள்ளத் தடுப்புத் திட்டம் உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று அவர் விளக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கிள்ளானில் மேரு, புக்கிட் கப்பார் மற்றும் பண்டார் புக்கிட் ராஜா பகுதிகளில் 20,000க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த மூன்று முனைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டம், நகரத்தின் பாதுகாப்பிற்கும், தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.