ஷா ஆலம், டிச 4 - இன்று ஷா ஆலாமில் உள்ள SSAAS கட்டிடத்தின் 5ஆம் தளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில், கிள்ளான், புக்கிட் ராஜாவைச் சேர்ந்த 65 வயதான திரு சீனி குப்பாய் அவர்களுக்கு புதிய அடையாள அட்டையை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வழங்கினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் நிரந்தர குடியிருப்பாளர் (Permanent Resident) அந்தஸ்தைப் பெற்றிருந்த திரு சீனி, இறுதியாக மலேசிய குடியுரிமையை பெற்றுள்ளார். இந்த தருணம் மிகவும் அர்த்தமுள்ள ஒரு நிகழ்வாக இருந்தது. மேலும், அடையாள அட்டையை பெற்ற அவருடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது என்றார் பாப்பாராய்டு.
அடையாள அட்டை தொடர்புடைய பிரச்சனைகள் உள்ளவர்கள் ஷா ஆலாமில் உள்ள SSAAS கட்டிடத்தின் 5ஆம் தளத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரலாம் என பாப்பாராய்டு தெரிவித்தார். அங்கே திருமதி ஷாந்தாவைச் சந்திக்கலாம் அல்லது அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி மற்றும் பிற செயல்முறைகள் குறித்து வழிகாட்டல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.



