ஈப்போ, டிச 4: போலி முதலீடு திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முதியவர் ஒருவர் RM300,651 இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 62 வயதான வேலை இல்லா அந்நபர் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (IPD) புகார் அளித்துள்ளார் என பேராக் மாநிலக் காவல்துறை தலைமை அதிகாரி டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் முகநூல் தளத்தில் குறிப்பிட்ட பங்கு முதலீட்டு விளம்பரம் பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்தது.
“பின்னர் பாதிக்கப்பட்டவர் அந்த முதலீட்டில் ஆர்வம் காட்டி, நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மொத்தம் RM300,651 ரொக்கத்தை 14 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். அந்த தொகை அவரது தனிப்பட்ட சேமிப்பு மற்றும் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து எடுத்த கடனின் மூலம் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
“வாக்குறுதி அளித்தப்படி இலாபத்தைப் பெற முடியாதபோது தாம் மோசடிக்குள்ளானதை உணர்ந்துள்ளார். இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று நூர் ஹிசாம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.


