குவந்தான், டிச 4: ரொம்பின் ஆற்றில் கணவர்–மனைவி பயணித்த கார் ஒன்று நீரில் மூழ்கிய சம்பவத்தில் அத்தம்பதியினரின் உடல்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டன.
லாரி ஓட்டுநர் முகமட் ஸைரில் பிடின் (40) மற்றும் அவரது மனைவி ஐஷா ஷாபி (55) ஆகியோரின் உடல்கள், அவர்கள் பயணித்த காரின் உள்ளே, சுமார் மதியம் 3 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டன என ரொம்பின் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பிரண்டெண்ட் ஷரிப் ஷாய் ஷரிப் மொண்டோய் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 59 மீட்டர் தொலைவில் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) குழுவினரால் அந்தக் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
“கார் கிரேன் உதவியுடன் மேலே எடுக்கப்பட்டபின், இருவரின் உடல்களும் அதன் உள்ளே இருப்பது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ரொம்பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
மதியம் 3.11 மணிக்கு நிறைவடைந்த இந்த மீட்பு நடவடிக்கையில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM), மலேசிய குடிமைப் பாதுகாப்பு படை (APM) மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.



