ரொம்பின், டிச 3: நேற்று கம்போங் ஆயாவ் பகுதியில் உள்ள ரொம்பின் ஆற்றில் கணவர்–மனைவி பயணித்த கார் ஒன்று நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த கார் இன்று காலை ஆற்றில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், கணவன் - மனைவி இருவரையும் காணவில்லை.
இன்று காலை 11 மணி அளவில், ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 59 மீட்டர் தொலைவில் கார் கண்டுபிடிக்கப்பட்டது என ரொம்பின் மாவட்டத் காவல்துறை துணை தலைவர், சூப்பிரண்டெண்ட் முகமட் சம்ரி முகம்ட் ஸாபர் தெரிவித்தார்.
“கார் கிடைத்த இடத்தில் ஆற்றின் ஆழம் சுமார் எட்டு முதல் 10 மீட்டர் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரண்டு நபர்களையும் காணவில்லை.``
தீயணைப்பு வீரர்கள் இன்று மீண்டும் சோதனை நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதன் பின்னர் வாகனத்தை மேற்பரப்புக்கு தூக்கும் பணிகள் நடைபெறும்,” என்று அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், முகமட் ஸைரில் பிடின் (40) மற்றும் அவரது மனைவி ஐஷா ஷாபி (55) ஆகியோர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் கெராதோங், முஹாட்ஸாம் ஷாவிலிருந்து கம்போங் சாராங் தியோங், தெலோக் காடிங் நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.



