ஷா ஆலம், டிச 3: MH370 விமானத்தின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காகக் கடல் தேடல் நடவடிக்கையை டிசம்பர் 30 முதல் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) நிறுவனம் மீண்டும் கடல் தேடல் பணியை 55 நாட்கள் தொடர்வதாக உறுதி செய்துள்ளது. இந்த தேடல் நடவடிக்கை இடைவெளியுடன் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை விமானத்தை கண்டுபிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்ட இலக்கு பகுதிகளின் மீது கவனம் செலுத்தும். இது, மலேசியா அரசு மற்றும் ஓஷன் இன்ஃபினிட்டி இடையிலான இவ்வாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
“இந்த முயற்சி விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அரசின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.”
MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் போது ரேடாரில் காணாமல் போனது. இதில் 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
விமானம் அதே நாளில் காலை பீஜிங் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால், அது தன் வழித்தடத்திலிருந்து விலகி சென்றதால், தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மலேசியா பல நாடுகளுடன் இணைந்து கடல் தேடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் மிகச் சிக்கலான தேடல் பணிகளில் ஒன்றாகும்.
இந்த விமானம் காணாமல் போனது, நவீன வரலாற்றில் மிகப்பெரிய விமான மர்மங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மீண்டும் தொடங்கும் இந்த தேடல் முயற்சி, இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் தரும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


