கோலாலம்பூர், டிச 3 - தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராக இந்திய இளைஞர் டனேஷ் பேசில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அச்செயற்குழுவில் நியமிக்கப்பட்ட ஒரே இந்தியர் ஆவார்.
மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் மற்றும் மலேசிய இளைஞர் மன்றத்தின் துணைத் தலைவருமாக டனேஷ் பதவி விகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம், மலேசிய இந்திய இளைஞர் மன்றத்திற்கும், அனைத்து இளைஞர்களுக்கும் மிகப் பெரிய பெருமை ஆகும் என மலேசிய இந்திய இளைஞர் மன்றம் தெரிவித்தது.
ஒரே இந்தியராக இடம்பெற்றிருக்கும் அவர் தேசிய தளத்தில் இளைஞர்களின் குரலாக இருந்து செயல்படவிருப்பதோடு அரசாங்கக் கொள்கைகளை வடிவமைக்கும் செயல்முறையிலும் ஈடுபடுவதற்கான முயற்சியை முன்னெடுக்கவிருப்பதாக தெரிவித்தார்.
ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முதன்மை தளமாக விளங்கும் இம்மன்றத்தில் ஈராண்டுகளுக்கான தமது பொறுப்பு குறித்து டனேஷ் இவ்வாறு கூறினார்.
"தற்போது நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, 3R-ஐ உட்படுத்தி பல பிரச்சனைகள் உருவாகுகின்றன. அதுமட்டுமின்றி, இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமான வன்முறை கலாச்சாரமும் நிலவி வருகின்றது. இதற்கான தீர்வுகளை கலந்தாலோசித்து அவற்றை அமல்படுத்த தீவிரமாகச் செயல்படுவோம்," என்றார் அவர்.
இதனிடையே, இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமை, தலைமைத்துவத் திறன் மற்றும் சமுதாய மாற்றத்தை உருவாக்கும் இயக்க சக்தியாக செயல்படுவதில் தாம் உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
--பெர்னாமா


