கோலாலம்பூர், டிச 3 - எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரை நாட்டில் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகளின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் தெரிவித்தார்.
இதுவரை எந்த விநியோக தடங்கல் பற்றியப் புகாரும் பெறவில்லை என அவர் மேலவையில் செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் அர் அருணாசலம் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினார்.
கடந்த நவம்பர் 10 வரையிலான நிலவரப்படி, அரசாங்க மருத்துவனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்காக 4,044 டோஸ்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 2,881 டோஸ்கள் இருந்தன என இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகளின் கையிருப்பை பற்றிய கேட்ட செனட்டர் லிங்கேஷ்வரனுக்கு அவர் பதிலளித்தார்.
இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் மலேசியா 26 மில்லியனுக்கும் மேற்பட்ட டோஸ்களை இறக்குமதி செய்துள்ளது என்றும் டத்தோ லுகானிஸ்மன் விளக்கினார்.
இவ்வேளையில், தனியார் சந்தையில் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகளின் விலைக் கட்டுப்பாடு குறித்து லிங்கேஷ்வரன் கேட்டதற்கு, எல்லை மீறிய விலை உயர்வைத் தடுக்க உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்போடு அணுக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகஅவர் கூறினார்.



