கோலாலம்பூர், டிச 3 - கடந்த நவம்பர் 30ஆம் தேதி வரை ஒரு லிட்டர் RM1.99 விற்கப்படும் RON95 பெட்ரோலை உட்படுத்தி RM5.16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 13.9 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், இக்காலக்கட்டத்தில் 2.59 பில்லியன் லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டிருப்பதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.
"இத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஆண்டுக்குச் சுமார் RM2.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து RM4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக எண்ணெய் விலைகளுக்கு உட்பட்டு மற்றும் BUDI95 செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய உள்நாட்டு பயனீட்டாளர் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் உள்ளது," என்று லிம் ஹுய் இங் கூறினார்.
இந்த சேமிப்பு வரம்பு உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு அமெரிக்க டாலர் 60இல் இருந்து 80 வரையிலான பல்வேறு சூழ்நிலைகளையும் மலேசியர் அல்லாதவர் மற்றும் வணிகப் பயனர்கள் போன்ற இலக்கு அல்லாத பிரிவுகளில் உதவித்தொகை நீக்கத்தைச் செயல்படுத்துவதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக அவர் விவரித்தார்.
பெர்னாமா


