கோலாலம்பூர், டிச 2- கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி, 1,333 தாமதமான, பிரச்சினைகள் நிறைந்த மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் 159,638 குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், இதன் மொத்த அபிவிருத்தி மதிப்பு RM126.47 பில்லியன் ஆகும்.
தாமதமான திட்டங்களால் ஏற்படும் இழப்பிலிருந்து வாங்குபவர்களை பாதுகாப்பதற்கும், தனியார் வீடமைப்புத் துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி துறை துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதீரா சாபு தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தை வீட்டு மேம்பாட்டாளர்கள் தீவிரமாகக் கையாள்வதை உறுதி செய்வதற்காக, அமைச்சகம் (KPKT) கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், வழக்கு தொடுத்தல், அபராதம் விதித்தல் மற்றும் சட்டம் 118-இன் கீழ் விதிமுறைகளுக்கு இணங்க தவறிய மேம் பாட்டாளர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும்,” என்று அவர் இன்று மக்களவையில் பதிலளித்தார்.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மேம்பாட்டாளர்கள், புதிய திட்டங்களுக்கு மேம்பாட்டு உரிமம் அல்லது விளம்பரம் மற்றும் விற்பனை அனுமதி ஆகியவற்றைக் கோர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பிரச்சினைகள் உள்ள திட்டங்களின் பட்டியல் வாங்குபவர்களின் பார்வைக்காக KPKT-இன் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் ஐமான் அதீரா கூறினார்.
எதிர்காலத்தில் திட்டங்கள் கைவிட படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும், மேம்பாட்டாளர்கள் நிதி நிர்வாகம் அதிக ஒழுக்கத்துடன் இருப்பதை உறுதி செய்யவும் 1966 ஆம் ஆண்டின் வீடமைப்பு மேம்பாட்டுச் சட்டம் (கட்டுப்பாடு மற்றும் உரிமம்) [சட்டம் 118] இப்போது மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலிவு விலை வீடுகள் (RMM) குறித்துப் பேசிய ஐமான் அதீரா, மக்கள் வீட்டு நிதியைப் பெறுவதில் உள்ள சிரமங்களுக்கு காரணம், பலவீனமான கடன் பதிவுகள், அதிக வீட்டுக் கடன்கள் மற்றும் நிலையற்ற வருமானம் அல்லது அதிகாரப்பூர்வ ஊதியச் சீட்டுக்கள் இல்லாமை என்று கூறினார்.
B40 மற்றும் M40 பிரிவினர் மலிவு விலை வீடுகளைப் பெறுவதை மேம்படுத்த, அரசாங்கம் வீடமைப்பு கடன் உத்தரவாதத் திட்டம் (SJKP) மூலம் முதல் வீடு வாங்குபவர்களுக்கு RM500,000 வரையிலான நிதி உத்தரவாதத்தை வழங்குகிறது. “அரசாங்கம் ஏழு மாநிலங்களில் வாடகைக்குப் பின் வாங்கும் திட்டத்தை (rent-to-own) அமல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் 6,958 குடும்பங்கள் வீடு வாங்க முடிந்தது. கூடுதலாக, வீட்டு உரிமையாளர் பிரச்சாரம் 2.0 (Home Ownership Campaign 2.0) மற்றும் RM7,000 வரையிலான வரி விலக்கு ஆகியவையும் முதல் வீடு வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க உதவுகின்றன,” என்று அவர் கூறினார். இந்த ஒட்டுமொத்த முயற்சிகள் அனைத்தும் மலிவு விலை வீடுகளை எளிதில் அணுகக்கூடிய தாகவும், குறைந்த செலவிலும், பாதுகாப்பாகவும் சொந்தமாக்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் விரிவான மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


