ஷா ஆலம், டிச 2 - சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வீடமைப்புப் பகுதிகளை மீட்டெடுப்பதன் மூலம் பழமையான குடியிருப்புப் பகுதிகளைத் தரம் உயர்த்துவதற்கும், நகர்ப்புற வளர்ச்சியை கட்டியெழுப்புவதற்கும் சிலாங்கூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய நிறுவனமாகச் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் (LPHS) செயல்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“இதுவும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் சவால்களில் ஒன்றாகும். இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டுக்கான திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்.
ஒருவேளை இது 2027 அல்லது 2028-இல் நிறைவேறலாம். இது வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டால், நம் மாநிலம் மேலும் சிறப்படையும். நான் இதை ஒரு துணை நிறுவனத்திடம் ஒப்படைப்பேன். ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையும் (PBT) ஒன்று அல்லது இரண்டு பழைய வீடமைப்புப் பகுதிகளைக் கையாளலாம் என்று LPHS மற்றும் உள்ளூர் அதிகார சபைகளைக் (PBT) கேட்டுக் கொள்வோம்.
சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ), கிள்ளான் அரச மாநகராட்சி (MBDK) போன்ற உள்ளூர் அதிகார சபைகள் தரம் உயர்த்தப் பட்டாலும், 50, 60 ஆண்டுகளுக்கு மேலான பழைய வீடமைப்புப் பகுதிகளை இன்னும் கொண்டிருக்க நாம் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான 'செரியா திட்டம்' (Skim Ceria) உதவித் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் வீடமைப்புச் செயற்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா-வும் உடனிருந்தார்.


