கிள்ளான், டிச 2- கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டா வீடமைப்புப் பகுதியில் தனது வீட்டிற்கு அருகில் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகப் பேர்வழிகள் மற்றும் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
வாகனத்தில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்த 26 வயது நபரின் உடலில் 5 துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. மிக நெருக்கமான இடைவெளியில் அந்த நபர் சுடப் பட்டுள்ளார் என்று ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஷாஸெலி இதனைத் தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு போதைப்பொருள் தொடர்பாக மூன்று குற்றப்பதிவுகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஷாஸெலி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அபாயகர போதைப்பொருள் சட்டம் 39B மற்றும் 1952 ஆம் ஆண்டு சுடும் ஆயுத சட்டத்தின் கீழ் தற்போது தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நபர் ஒருவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட போது, இரண்டுக்கும் தொடர்பில்லை என்று டத்தோ ஷாஸெலி தெரிவித்தார்.
புக்கிட் திங்கி சம்பவம் தற்போது போலீஸ் விசாரணையில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


