கோலாலம்பூர், 2 டிசம்பர்: இனிப்பு கலந்த பானங்களுக்கான உற்பத்தி கட்டணத்திலிருந்து (SSB) வசூலிக்கப்பட்ட தொகையில் RM21 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டு, 49,128 நோயாளிகளுக்கு பயனளிக்கும் SGLT2 தடை மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை SSB வசூல் RM 54.9 மில்லியன் ஆக இருந்தது. 2024 முழுவதும் அது RM 68.6 மில்லியன் என்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
“Type 2 நீரிழிவு நோயைச் சிகிச்சை செய்யும் திறன், நீண்டகால சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்படுவதைத் தாமதப்படுத்துவது, இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதிலும், SGLT2 தடை மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது இதய செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் ஆபத்தையும், இதய நோயால் மரணம் அடையும் ஆபத்தையும் குறைக்கிறது. CKD முன்னேற்றத்தை மெதுவாக்கி சிறுநீரக செயல்பாட்டை பாதுகாக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் உடல் எடையையும் கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
மேலும் 2025 ஆம் ஆண்டு இந்த சிகிச்சைக்கு RM40 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது; 2020-ல் 36 சதவீதமாக இருந்தது, தற்போது 42 சதவீத நோயாளிகள் இந்த சிகிச்சையை பெறுகின்றனர்.


