ஷா ஆலம், டிச 2: கடந்த நவம்பர் 27 முதல் ஆச்சே மற்றும் வட சுமாத்திரா பகுதிகளில் உள்ள மூன்று மலேசியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை நிலவுகிறது.
விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையின்படி, அவர்கள் 63 மற்றும் 64 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர் என மேடான் மலேசியப் பொது தூதரகம் தெரிவித்துள்ளது.
அவர்களுடன் ஏற்பட்ட கடைசி தொடர்பு வட சுமாத்திரா பகுதியைக் காட்டுகிறது. அதற்கு பின் மோசமான வானிலை மற்றும் அந்தப் பிராந்தியத்தைப் பாதித்த பேரிடர் காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
“அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, கிடைத்தவுடன் உடனடி உதவி வழங்குவதற்காகப், பொதுத் தூதரக குழு அங்குள்ள அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 30 வயதுடைய இன்னொரு மலேசியர், அஸ்ருல் நிசாம் அப்பிரிட்வ்சோன், கடந்த நவம்பர் 27 அன்று மேற்குச் சுமாத்திராவின் பாடாங் பஞ்ஜாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனார்.
அவரைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் இந்தோனேசிய அதிகாரிகளால், பொதுத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருந்து, சமீபத்திய தகவல்களைப் பின்பற்றவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்துகிறது.
குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள சிரமப்படுபவர்கள், மேடான் மலேசிய பொதுத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +62 823-6164-6046 அல்லது மின்னஞ்சல் mwmedan@kln.gov.my மூலம் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.


