ஷா ஆலம், டிச 2: கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால், மழைநீர் நதிக்கு தடையில்லாமல் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த கோலா லங்காட் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) சில இடங்களில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
மழைநீர் நிறைந்தோடும் அபாயம் ஏற்படாமல் தடுக்கவும், வடிகால் அமைப்பு சரியாக செயல்படுவதையும் உறுதிப்படுத்தவும் இந்த கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
கூடுதல் நடவடிக்கையாக, அதிக ஆபத்தான பகுதிகளில் பம்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.
“இந்த பம்புகளின் பயன்பாடு, வழக்கத்தை விட அதிக அளவு நீரை வெளியேற்றும். இதன் மூலம் வடிகால் அமைப்பின் அழுத்தத்தை குறைக்க முடியும்,” என்று அத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது.
எனினும், அபாய நிலையை மீறி உள்ள நதிநீர் மட்டமும் நீரின் வெளியேற்றத்தை மந்தமாக்கும் முக்கிய காரணமாக உள்ளது. இதனால், நீர் குறையும் செயல்முறை சாதாரண நிலையை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
நிலையற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் எடுத்த நடவடிக்கைகள், நீர் குறையும் வேகத்தை அதிகரிக்க உதவும் என்று ஜேபிஎஸ் நம்புகிறது.


