அலோர் ஸ்டார், டிச 2- வெள்ளத்தினால் ஹட்யாயில் 1000க்கும் மேற்பட்ட மலேசிய வாகனங்கள் சிக்கி கொண்டுள்ளன என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுங்கை பட்டாணி தன்னார்வ தீயணைப்புப் படையின் (PBS) தலைவர் லியோங் பெங் தாட், சுமார் 1,200 முதல் 1,500 வரையிலான வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றில் சில ஹோட்டல்களின் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாகனங்களை மீட்கும் பணியில் சவால்கள் இருப்பதாகவும், ஏனெனில் மலேசியாவிலிருந்து செல்லும் இழுவை வண்டிகள் (towed trucks) பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
"மலேசிய லாரிகள் அங்கு செல்ல முடியாது. அதனால், தாய்லாந்து இழுவை வண்டிகள் மூலம் வாகனங்களை எல்லை வரை இழுத்து வந்து, பின்னர் எங்கள் லாரிகளுக்கு மாற்றப்பட வேண்டும்," என பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் விளக்கினார்.
மேலும், அனைத்து காப்பீட்டு பாலிசிகளும் வெளிநாடுகளில் பாதுகாப்பு வழங்குவதில்லை என்பதால், சில வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை தாங்களே இழுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.
கடுமையான சேதம் காரணமாக சிலர் தங்கள் வாகனங்களை அங்கேயே விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்த மீட்புப் பணியில் 23 மலேசிய தன்னார்வ மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவி செய்ததற்காகத் தங்கள் குழுக்களுக்குப் பல பாதிக்கப்பட்டவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர் என்றும் பெங் தாட் கூறினார்.




