கோலாலம்பூர், டிச 1- சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டேய் கைது செய்யப்பட்டபோது, தனது அதிகாரிகள் அவரது உடமைகளை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று கடுமையாக மறுத்துள்ளது.
ஊழல் தடுப்பு அமைப்பின் மூலோபாயத் தகவல் தொடர்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், டேய் கைது செய்யப்பட்ட அன்றே, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை அதிகாரிகள் அவரிடம் ஒப்படைத்ததாகவும், அந்தப் பட்டியலில் அவர் தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் டேய்யின் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை MACC வன்மையாக மறுக்கிறது.
MACC தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட சட்ட விதிகளுக்கு ஏற்ப தனது கடமைகளை எப்போதும் நிறைவேற்றுகிறது," என்று அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 2009-ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் பிரிவு 33-இன் படி, பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துக்களின் பட்டியலின் நகல் நவம்பர் 28-ஆம் தேதி டேய்யிடம் வழங்கப்பட்டது என்றும் அது கூறியுள்ளது.
"பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கைபேசிகள், ஓர் iPad மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை உள்ளன. அவை ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளது," என்றும் அது மேலும் தெரிவித்தது.
சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப் பட்டதாகக் கூறப்படும் நிதியை மீட்பதற்காக, அவர் ஷாம்சுல் இஸ்கந்தருக்கு லஞ்சம் கொடுத்ததாக டேய் கூறியதைத் தொடர்ந்து, அவரும், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் அரசியல் செயலாளருமான ஷாம்சுல் இஸ்கந்தர் அகின் ஆகியோர் லஞ்ச ஊழல் விசாரணைக்கு உதவுவதற்காக சனிக்கிழமை ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சபா சுரங்க ஊழல் சர்ச்சையின் மையத்தில் இருக்கும் டேய், மற்றொரு வழக்கில் லஞ்சம் கொடுத்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



