பாகான் டத்தோக், டிச 1 — இரண்டாம் கட்டமாக வெள்ளம் ஏற்படும் சாத்தியம் இருப்பதை முன்னிட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (நட்மா) உயர்தர தயார் நிலையில் உள்ளது. அதே நேரத்தில், பந்துவான் வாங் இஹ்சான் (நிதியுதவி) வழங்கல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் உடனடியாகப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை அது உறுதி செய்து வருகிறது.
நிலையற்ற காலநிலை மாற்றங்களால் தயார்நிலைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மலாக்கா நீரிணையில் அரிதாக ஏற்படும் சென்யார் வெப்பமண்டல சூறாவளி உட்பட, முன்பு பாதிக்கப்படாத பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட இந்த வானிலை வழிவகுத்துள்ளது என தேசியப் பேரிடர் மேலாண்மை குழு தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அக்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
மேலும், கூடுதல் உதவிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் நிதியுதவி விரைவாக விநியோகிக்கப்படும் என்றார்.
"மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு உதவிகள் வழங்கப்பட்டது.
சேதமடைந்த வீடுகளில் புதிய உபகரணங்களை வாங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தேவைப்படுவதால் இன்று முதல் உதவி வழங்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன்," என்று பேராக், பாகன் டத்தோவில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்த சுருக்கமான விளக்கமளிப்பில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பெர்னாமா


