கோலாலம்பூர்,1 டிசம்பர் : மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி துறையில் ஒரு புதிய அத்தியாயம் நேற்று எழுதப்பட்டது. பார்வையற்ற கல்வியாளரான டாக்டர் நோர்ஹில்ஹாம் இஸ்மாயில், மனிதநேயம் மற்றும் வரலாற்றியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு சிறப்பான மைல்கல்லை உருவாக்கியுள்ளார்.
மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ் தாமஸ் கூறியதாவது, இது மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் வலிமையையும், சம வாய்ப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சாதனையாகும். மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் நோர்ஹில்ஹாம் இந்த உயரிய பட்டத்தை பெற்றது சங்கத்திற்கு மிகப் பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பார்வையற்ற நிலையில் தனது கல்விப் பயணத்தை தொடர்ந்து, முனைவர் பட்டத்தைப் பெறுவது டாக்டர் நோர்ஹில்ஹாம் விடாமுயற்சியின் மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வியில் முன்னேறும் வாய்ப்புகளை மலேசியா வழங்கி வருவதற்கான தெளிவான சான்றாகும்.
அவரது கல்விப் பயணத்தை நெருக்கமாக ஆதரித்து வந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்த சிறப்பு நாளில் நேரில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதும் விழாவின் முக்கிய தருணமாக அமைந்தது. அமைச்சரின் துணை, ஊக்கம் மற்றும் அன்பான ஆதரவு, இந்த சாதனையை முழுமையாக்க உதவியாக இருந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.
டாக்டர் நோர்ஹில்ஹாமின் இந்த வெற்றி, மலேசியாவில் மாற்றுத் திறனாளிகளின் திறனை உயர்த்தி காட்டும் சக்தி வாய்ந்த செய்தி மட்டுமல்ல, அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் போது எதையும் சாதிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.


