ஷா ஆலம், டிச 1 — கடந்த வெள்ளிக்கிழமை ராயல் சிலாங்கூர் யாட் கிளப்பில் நடைபெற்ற கிள்ளார் அரச மாநகர் மன்றம் (MBDK) ஏற்பாடு செய்த ஊடகப் பாராட்டு விழாவில், மீடியா சிலாங்கூர் இரண்டு விருதுகளை வென்றது.
கிள்ளான் பகுதியில் கட்டுப்பாடற்ற தங்கும் இட பிரச்சனையைத் தீர்க்க மையத் தங்கும் விடுதி என்ற சிறப்பு செய்திக்காக, சிறந்த தொலைக்காட்சி செய்தியறிக்கை என்ற விருதை பத்திரிகையாளர் சித்தி ரோஹைசா சைனல் வெற்றார்.
அதேவேளை, கிள்ளான் அரச நகரமாக அறிவிப்பு என்ற செய்திக்காக, பிச்சாரா செமாசா நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட கிள்ளான் அரச மாநகர் செய்தி விருதைப் அலிவ் ஹைகால் முகமட் பெற்றார்.
இந்நிகழ்வில், 70க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் விருதுகளை கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் மேயர், டத்தோ அப்துல் ஹமிட் உசையின் வழங்கினார்.
நிர்வாக வலையமைப்பில் ஊடகம் மிக முக்கிய பங்கு வகிப்பதுடன், கிள்ளான் அரச மாநகர் மன்றத்தை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கிள்ளான் மக்களுடன் இணைக்கும் மூலோபாய கூட்டாளர் என்றும் அவரின் உரையில் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு செய்தி, கட்டுரை மற்றும் காட்சிப்படங்கள் எம்பிடிகே நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கான பெரும் பங்களிப்பை வழங்குகின்றது. சட்டவிரோதக் குப்பை கொட்டுதல், தெரு நாய்கள் அல்லது போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகளைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் கண்காணிப்பு மற்றும் சமநிலை செயற்பாடாக உள்ளது என்றார்.
கிள்ளான் அரச நகரமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இரண்டாவது ஆண்டில் பல சவால்களை சந்தித்தாலும், பெருமைக்குரிய சாதனைகளும் எட்டப்பட்டுள்ளது.
“இந்த புதிய அந்தஸ்தின் அர்த்தத்தை முழுமையாக உணர்த்தி, குடிமக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எம்பிடிகே தீவிரமாக செயல்படுகிறது. கழிவு மேலாண்மை, நிலையான வளர்ச்சி மற்றும் சேவை வழங்கல் போன்ற அம்சங்களுக்கு தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை,” என்றும் அவர் கூறினார்.




