கோலாலம்பூர், டிச 1- அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இப்போதைக்கு இருக்காது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாறாக, காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதிலேயே இப்போது கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். "நாம் சில காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. ஆனால், மடாணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் சுமார் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், பெரிய அளவிலான மாற்றம் பொருத்தமானதாக இருக்காது.
எனவே, பெரிய மாற்றங்களை நான் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை நான் பரிசீலித்து வருகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தலைநகரில் பெரோடூவாவின் முதல் மின்சார வாகனத்தை (EV) அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். நிர்வாகத்தின் செயல்திறனை உறுதிப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், ஆனால் இந்த நேரத்தில் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் அவசரத் தேவை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில அமைச்சர்கள் மற்றும் செனட்டர் அந்தஸ்து கொண்ட துணை அமைச்சர்களின் பதவிக்காலம் இம்மாத தொடக்கத்தில் முடிவடைய இருப்பதால், அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.


