குவாந்தான், 1 டிசம்பர்: கடந்த வெள்ளிக்கிழமை கேமரன் மலையில், தானா ராத்தா பகுதியில் உள்ள புன்சாக் அனபெல்லா தங்கும் விடுதியின், 'பிளாக் C' அருகிலுள்ள மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு, தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணம் என நம்பப்படுகிறது.
புன்சாக் அனபெல்லா 'பிளாக் C' யில் உள்ள 24 வீட்டிலிருந்து மொத்தம் 91 பேர் பாதிக்கப் பட்டதால், அவர்கள் தற்காலிக இடமாற்ற மையமாக அமைக்கப்பட்ட புன்சாக் அனபெல்லா மண்டபத்துக்கு மாற்றப் பட்டுள்ளனர் என்று கேமரான் மலை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) தெரிவித்தது.
எட்டு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தற்காலிக மையத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், 16 குடும்பத்தைச் சேர்ந்த 51 பேர் அருகே உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு 8.45 மணியளவில் நடந்த போதும், எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
மேலும், கேமரன் மலை நகரசபை மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் சம்பவம் நடந்த அதே நாளில் நிலச்சரிவு தூய்மைப்படுத்தும் பணிகளை நிறைவு செய்துள்ளன. நவம்பர் 29 ஆம் தேதி அதிகாலையில், அப்பகுதிக்கான வாகனப் போக்குவரத்து மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டது.
பொதுமக்கள், குறிப்பாக சமூக வலைதளப் பயனர்கள், இந்த நிலை குறித்து உறுதியான தகவல் அல்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


