ஜோர்ஜ்டவுன், டிச 1: பாயான் லெப்பாஸ் அருகிலுள்ள சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹஷிம் சாலையில் நவம்பர் 4ஆம் தேதி உருவான நில அமிழ்வை தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் குழாய் வழித்தடத்திற்கு கூடுதல் மேம்பாட்டு பணிகள் அவசியம் என இண்டா வாட்டர் கன்சோர்டியம் (IWK) கண்டறிந்துள்ளது.
இந்த பணிகளை நிறைவு செய்ய, அப்பகுதியின் சாலையை டிசம்பர் 12 வரை மூட IWK கோரியுள்ளது என்று பினாங்கு மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் குழுத்தலைவர் சைரில் கீர் ஜோஹாரி தெரிவித்தார்.
இந்தப் பணிகளின் முன்னேற்றமும், அவை நிறைவு பெறும் காலமும் அப்பகுதியின் வானிலை நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்கும் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார். ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹஷிம் சாலையில் ஏற்பட்ட நில அமிழ்வுக்கு நிலத்தடியில் உள்ள குழாய் கசிவுதான் காரணம் என நம்பப்பட்டது.
முன்னதாக, இச்சம்பவம் குறித்த படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தின.


