காலிஃபோர்னியா, டிச 1 — கடந்த சனிக்கிழமை, வடக்கு காலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டாக்டனில் நடைபெற்ற குடும்பச் சந்திப்பு ஒன்றில் 14 பேர் சுடப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது என ஸ்டாக்டன் துணை மேயர் ஜேசன் லீ தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
"என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறிய நான் பணியாளர்களுடனும் பொது பாதுகாப்பு அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளேன்," என்று அவர் கூறினார்.
ஸ்டாக்டனில் உள்ள லூசைல் அவென்யூவின் 1900ஆம் பிளாக்கின் அருகில் மாலை 6.00 மணிக்கு முன் துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்து தகவல் பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"தற்போது, சுமார் பத்து பேர் இச்சம்பவத்தால் காயமடைந்துள்ளதாகவும், நான்கு பேர் இறந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்று தகவல் வெளியாகியுள்ளது.
"இச்சம்பவம் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. அனைத்து சாத்தியக்கூறுகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன."
அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியவனை பற்றிய எந்த விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை.


