ஷா ஆலம், டிச 1: பெற்றோர்கள் தங்களின் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை உடனடியாக மாற்றுத்திறனாளிகள் (OKU) என பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் அக்குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையையும், உதவியும் கல்வி வாய்ப்புகளும் தவறவிடாமல் பெறவும் முடியும்.
இவர்கள் மக்கள் நலத் துறையில் பதிவு செய்யாததால் சிறப்பு தேவைகள் கொண்ட இந்தக் குழுவினர் உரிய உதவியும் சேவைகளும் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என சிலாங்கூர் மாற்றுத்திறனாளி நடவடிக்கை கவுன்சில் (MTOS) தலைவர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் தெரிவித்தார்.
“சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 1,47,000 ஆக உள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள மக்கள் தொகையின் 15 சதவீத இலக்குடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவாகவே இருக்கிறது.
“சில பெற்றோர்கள் இதில் பதிவு செய்ய விரும்பாமல் உள்ளனர். ஆனால், குழந்தை மாற்றித்திறனாளி என்று உறுதிப்படுத்தப்பட்டபோதும் சில அறிகுறிகள் தோன்றும்போதும் அவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த செயல்முறைக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால், பதிவு செய்யாமல் இருந்தால், நாங்கள் உதவி வழங்க முடியாது.
“மேலும், தங்கள் குழுந்தைகள் சாதாரண பள்ளியில் சேர முடியாது அல்லது காப்பீட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என அஞ்சுவதால் பதிவு செய்ய தயங்குகின்றனர். பெற்றோர்கள் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றனர், ஆனால், நாங்கள் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.


