கோலாலம்பூர், நவம்பர் 30 — மலேசியாவின் டிஜிட்டல் எதிர்காலம் நம்பகமான ஆற்றல் சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்துள்ளது. இதில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மலேசியாவை பிராந்திய தரவு மையமாக (regional data centre hub) மாற்றுவதில் முக்கியமான பங்காற்ற தயாராக உள்ளது.
இதற்காக, 2035-ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் (MW) அளவிலான தரவு மைய மின்தேவையை வழங்கும் திறன் TNB-க்கு உள்ளதாக அதன் தலைமை சில்லறை தேவை அதிகாரி டத்தோ கமால் அரிஃபின் ஏ. ரஹ்மான் தெரிவித்தார்.
தற்போது TNB-யின் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் 27,690 மெகாவாட் ஆகும். இது சந்தையில் 51.4% பங்கைக் கொண்டுள்ளது. இதை 26,000 கி.மீ பரிமாற்றக் கோடுகளும், 734,000 கி.மீ விநியோக வலையமைப்பும் ஆதரிக்கின்றன.
நாடு முழுவதும் 10.4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு TNB-யின் சில்லறைப் பிரிவு சேவை வழங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 138,000 GWh மின்சாரத்தை விநியோகிக்கிறது.“பிராந்தியத்தில் தரவு மையத் திறன் விரைவாக விரிவடைந்து வருகிறது, குறிப்பாக மலேசியாவில்.
இப்போதைய சவால் மலிவு விலை, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை ஆகிய மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அல்ல; மூன்றையும் ஒரே நேரத்தில் அடைவதுதான்” என்று அவர் சிங்கப்பூர் சர்வதேச ஆற்றல் வாரம் (SIEW) 2025-ல் பேசினார்.
36 மாதங்களில் இருந்து வெறும் 12 மாதங்களாக தரவு மைய இணைப்பை விரைவுபடுத்தும் ‘கிரீன் லேன் பாத்வே’ (Green Lane Pathway), இரட்டை மின் வழங்கல் நம்பகத்தன்மை கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் மலேசியாவை நிலையான டிஜிட்டல் உள் கட்டமைப்பில் வலுவான போட்டியாளராக TNB ஆகி வருவதாக அவர் கூறினார்.
இந்தப் பாதை திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்தீர்வுகள், எளிமையான ஒப்புதல் செயல்முறை, தரவு மையம் தொடர்பான அனைத்துக்கும் ஒரே இடத்தில் (One-Stop Centre - OSC) ஆதரவு வழங்குகிறது.
“கிரீன் லேன் பாதை மற்றும் OSC முயற்சிகள் மூலம் மலேசியாவை பசுமை தரவு மையங்களின் பிராந்திய மையமாக (green data centre regional hub) TNB மூலோபாய ரீதியாக நிலைநிறுத்துகிறது” என்றார்.மலேசியாவின் ஆற்றல் மாற்றத்தை (energy transition) டிஜிட்டல் பொருளாதாரத்தின், குறிப்பாக தரவு மையங்களின் விரைவான வளர்ச்சியுடன் இணைத்து வருவதாகவும், தேசிய ஆற்றல் மாற்றப் பாதை வரைபடம் (NETR) மற்றும் 2050-ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) இலக்குடன் இது ஒத்திசைவதாகவும் அவர் தெரிவித்தார்.
TNB தானே 2030-ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது (இதில் 500 MW சூரிய சக்தி மற்றும் 2.5 GW மிதக்கும் சூரிய சக்தி அடங்கும்).புதுப்பிக்கத்தக்க மின் வழங்கல் திட்டம் குறித்து விளக்கிய அவர், இது மூலோபாய கூட்டாண்மை கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் நடைபெறுவதாகக் கூறினார்.



