ஷா ஆலம், நவம்பர் 29 — தற்போதைய மோசமான வானிலை நிலவரத்திற்கு மத்தியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பொறுப்பாளருமான ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
SK சாலக், தாமான் கெமிலாங் சமூக மண்டபம் மற்றும் டெங்கில் சமூக மண்டபம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையங்களுக்கு (PPS) அவர் மேற்கொண்ட விஜயம், நிவாரண மையங்களில் உள்ளவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கும், குறிப்பாக சுகாதார ரீதியான தேவைகளை அறிந்து கொள்வதற்கு ஆகும் என்றார்.
“எனது விஜயத்தின் போது பாதிக்கப் பட்டோரைச் சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து கொண்டேன். PPS-இல் தங்கியிருக்கும் வரை அவர்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்தேன்” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசு ஊக்குவிப்பதாக ஜமாலியா கூறினார்;-
:* வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்புகளுக்கு காவல்துறையில் புகார் அளிப்பது — இது உதவி வழங்கல் மற்றும் காப்பீட்டு உரிமை கோரலுக்கு உதவும்.
* வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னரே PPS-ஐ விட்டு வெளியேறுதல்.
* உடல் அல்லது மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்தல்
பாதுகாப்புப் படையினர், சுகாதார அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து திரட்டப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.ஒவ்வொரு பாதிக்கப் பட்டவருக்கும் தகுந்த உதவி கிடைப்பதையும், பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதையும் உறுதி செய்ய பேரிடர் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று ஜமாலியா தெரிவித்தார்.



